இந்தியாவில் உள்ள பல்கலைகளின் தரவரிசை பட்டியல் - மத்திய அரசு வெளியிட்டது- அண்ணா பல்கலைக்கு இடமே இல்லை

இந்தியாவில் உள்ள பல்கலைகளின் தரவரிசை பட்டியலை முதல்முறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலை பட்டியலில் இடம் பெறவில்லை.

உலக அளவில், பல்கலைகளின் செயல்பாடுகளை, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், இங்கிலாந்தை சேர்ந்த,' குவாக்வாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலை வெளியிடும். இதில், இந்திய பல்கலைகள் இடம் பெறுவதில்லை என குறை இருந்தது.எனவே, இந்த பிரச்னையை போக்க,'இந்திய பல்கலைகளை மத்திய அரசே தரம் பிரித்து, தர வரிசை பட்டியலை வௌியிடும்' என, கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி அறிவித்தார். அதன்படி, தேசிய பல்கலைகள் தரவரிசை நிறுவனமான என்.ஐ.ஆர்.எப்., நிறுவப்பட்டு, இந்தியாவின் அனைத்து பல்கலைகளும்பங்கேற்று, தங்களின் பாடத்திட்டம், கல்லுாரி கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, பயிற்சி முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றது.

இதை தொடர்ந்து, முதல் தேசிய தரவரிசைப் பட்டியலை, நேற்று மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி, சென்னை ஐ.ஐ.டி., தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. மும்பை மற்றும் கரக்பூர் ஐ.ஐ.டி.,க்கள் அடுத்த, இரண்டு இடங்களை பெற்றுள்ளன.

தமிழகத்தில் முன்னணியில் உள்ள அண்ணா பல்கலை இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அண்ணா பல்கலையில் இருந்து பல்கலையின் விவரங்களை மத்திய அரசுக்கு அளிக்க வில்லை என கூறப்படுகிறது. பாரதியார் பல்கலை, 14ம் இடம், கோவை அம்ரிதா பல்கலை, 19; தமிழக கால்நடை மருத்துவ பல்கலை, 36; வேளாண் பல்கலை, 40வது இடங்களை பெற்றுள்ளன. தஞ்சையில் உள்ள மத்திய பல்கலை, 67வது இடத்தையே பெற்றுள்ளது. இந்திய பல்கலைகளை பொறுத்தவரை, இன்ஜி., மேலாண்மை மற்றும் மருத்துவ பல்கலைகள் அனைத்தும், ஒரே நிலையில் வைத்து தரம் பிரிக்கப்பட்டுள்ளன. 'இன்ஜி., மருத்துவம் மற்றும் கலை என பிரித்து தரம் வெளியிடலாம்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த பட்டியலுடன், இரண்டாம் தர பல்கலைகளின் பட்டியலும் வரும் என, தேசிய தரவரிசை நிர்ணய கமிட்டி தெரிவித்துள்ளது.
-Source :  Dinamalar-